உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலணி, பைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., போதும்

காலணி, பைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., போதும்

கோவை : இந்திய காலணித் தொழில்கள் கூட்டமைப்பு (சிபி) தலைவர் நவுஷத் அறிக்கை: சமீபத்திய ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களில், ரூ.2,500க்கும் குறைவான விலை கொண்ட காலணிகளுக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு, நுகர்வோரின் சுமையைக் குறைக்கும். இப்பிரிவில் நுகர்வு அதிகரித்து, குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு நிவாரணம் அளிக்கும். இதனை, 'சிபி' வரவேற்கிறது. அதேசமயம், காலணித் துறையின் நீண்ட கால கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். சோல், அபர்ஸ், இன்சோல், ஒட்டிகள், அச்சுகள் உள்ளிட்டவை 18 சதவீத வரம்பில் வருகின்றன. இதனால், குறு, சிறு, நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்து, போட்டித்திறன் பாதிக்கப்படுகிறது. இதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தோல் அல்லாத பை, ஸ்கூல் பேக், டிராவல் பேக்குகள், பேக் பேக்குகள் போன்ற (ஹெச்.எஸ்.என்: 4202) அவசியமான பொருட்கள், ரூ.1,000க்கு கீழ் இருப்பினும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,க்குள் வருகின்றன. இதை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஜவுளித்துறைக்கு பின், இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக, காலணி மற்றும் அது சார்ந்த துறை உள்ளது. இதில், பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். காலணி உபகரணங்கள் மற்றும் பேக்குகளுக்கான ஜி.எஸ்.டி., சீரமைப்பு, உள்நாட்டுத் தேவையை மீண்டும் உயிர்ப்பிக்கும். இந்தியாவை தோல் அல்லாத காலணி மற்றும் அணிகலன்களுக்கான உலக மையமாக நிலை நிறுத்தும். மேற்கண்ட சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !