உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 50 ஆயிரம் பஞ்சு பேல் விற்க வேண்டும்: இந்திய பருத்திக் கழகத்துக்கு சிஸ்பா வலியுறுத்தல்

50 ஆயிரம் பஞ்சு பேல் விற்க வேண்டும்: இந்திய பருத்திக் கழகத்துக்கு சிஸ்பா வலியுறுத்தல்

கோவை : இந்திய பருத்திக் கழகம் (ஐ.சி.சி.,), தமிழக கிடங்குகள் வாயிலாக, பருத்திப் பருவ காலத்தில் 50 ஆயிரம் பஞ்சு பேல்களை, விற்பனை செய்ய வேண்டும் என, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, சிஸ்பா செயலாளர் வெங்கடேஷ் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச சந்தையை விட, உள்நாட்டு பஞ்சு விலை 15 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. எனவே, பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரிக்கு விலக்களிக்க வேண்டும்.இந்திய பருத்தி உற்பத்தியில், சுமார் 45 சதவீதம், தமிழக நூற்பாலைகளால் கொள்முதல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் பஞ்சுக் கிடங்கு அமைக்கத் தடையாக இருந்த பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி வரியை, தமிழக அரசு நீக்கியது.இதன்பிறகும், ஐ.சி.சி., தமிழகத்தில் பருத்திக் கிடங்கு அமைக்க முன்வரவில்லை. ஆனால், மாதா மாதம், கிளை மற்றும் வகை வாரியாக தேவையான பஞ்சைத் தெரிவித்தால், தமிழ்நாட்டின் கிடங்கு விற்பனையின் கீழ், பஞ்சு பேல்களை அனுப்புவதற்கு வசதியாக இருக்கும் என்கிறது.தமிழக நூற்பாலைகள் பஞ்சின் தரத்தை, எளிதில் ஆய்வு செய்து கொள்முதல் செய்ய ஏதுவாக, இந்த ஆண்டு பருத்திப் பருவ காலம் முதல் 50 ஆயிரம் பஞ்சு பேல்களை, தமிழக கிடங்குகள் வாயிலாக, விற்பனை செய்ய வேண்டும்.ஐ.சி.சி.,ல் ஒப்பந்தம் செய்யப்பட்ட பஞ்சு பேல்களை, இலவசக் காலம் முடிந்தபின் எடுத்தால், 15 சதவீத கூடுதல் கட்டணம் (கேரியிங் காஸ்ட்) விதிக்கப்படுகிறது. இது, வங்கி வட்டி விகிதத்தை விட அதிகம். ரெப்போவுடன் பொருந்தக்கூடிய, 6.5 சதவீத வட்டி விகிதமே வசூலிக்க வேண்டும்.குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிக்கு நேரடி பயன்பரிமாற்ற முறையைப் பின்பற்றினால், விவசாயிக்கும் கூடுதல் விலை கிடைக்கும், சந்தை விலைப்போக்கையும் கவனிக்க முடியும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கண்காணிக்கனும்

'நூற்பாலைகள், தங்களது பஞ்சு நுகர்வுத் திறனைவிட, கூடுதல் பஞ்சு கொள்முதல் செய்கின்றனவா என, மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். பஞ்சு வியாபாரிகள், நூற்பாலைகளின் பெயரில் மொத்தமாக பஞ்சு கொள்முதல் செய்வதைத் தடுக்க வேண்டும். நூற்பாலைகளுக்கு பி.ஐ.எஸ்., சான்று பெறுவதற்கான விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். மேற்கூரை சோலார் மின்சாரத்துக்கான நெட்வொர்க் கட்டணங்களை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் பசுமை எரிசக்தியை ஊக்குவித்து, 15 சதவீத மூலதன மானியம் வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார் வெங்கடேஷ் பிரபு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி