உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனித்துவ அடையாள எண் 57 சதவீத விவசாயிகள் பதிவு

தனித்துவ அடையாள எண் 57 சதவீத விவசாயிகள் பதிவு

கோவை : தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு வரும் ஏப்.,லில் மத்திய அரசு வழங்கும் 20வது கிசான் சம்மன் நிதி விடுவிக்கப்படாது என்ற வதந்தியை, விவசாயிகள் நம்ப வேண்டாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.மத்திய அரசு, வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 'தனித்துவ அடையாள எண்' வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, விவசாயிகளின் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, கூட்டுப்பட்டா ஆகியவை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, விவசாயிகளின் ஒப்புதலோடு பதிவேற்றப்படும்.மத்திய அரசு வழங்கும் உதவிகள், விவசாயிகள் அல்லாதவர்களுக்குச் செல்வது தடுக்கப்படும். எதிர்காலத்தில் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் இது உதவியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. தனித்துவ அடையாள எண், அந்த விவசாயி மற்றும் விவசாய நிலத்துக்கான ஆதார் போன்று பயன்படுத்தப்படும். கோவை மாவட்டம் உட்பட தமிழகம் முழுதும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இந்த விவரங்கள் பதிவேற்றப்படுகின்றன.கோவை மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:வேளாண்மை, தோட்டக்கலைத் துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள் (சி.ஆர்.பி.,), இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் வாயிலாக, முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளின் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன. இதுதவிர, பொது சேவை மையம் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.தனித்துவ அடையாள எண் என்பது, இந்திய அரசின் திட்டம். இது விவசாயிகளுக்கான நலத்திட்டம் உரியவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்கிறது. இதில் பதிவு செய்து கொள்வது விவசாயிகளுக்கு நல்லது. உடனடியாக பதிவு செய்யாவிட்டால், 20வது கிசான் சம்மன் நிதி தவணை வராது என்பது தவறான தகவல். அப்படி உத்தரவு ஏதும் வரவில்லை. கோவையில் 85 ஆயிரத்து 427 விவசாயிகள் உள்ளனர்.இதுவரை 49 ஆயிரத்து 34 விவசாயிகள், தனித்துவ அடையாள எண்ணுக்கு பதிவு செய்துள்ளனர். பதிவை துரிதப்படுத்தி வருகிறோம்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை