காட்டு யானைகளால் 60 தென்னை மரங்கள் சேதம்
மேட்டுப்பாளையம்; சீளியூர் பகுதியில் நான்கு காட்டு யானைகள், தென்னந்தோப்பில் புகுந்து, 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளன.காரமடை அருகே சீளியூர் காளம்பாளையம், மணல்புதுார் பகுதிகளில் பல குடியிருப்புகளும், விவசாய நிலங்களும் உள்ளன. தென்னை, வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இப்பகுதியில் யானைகள், காட்டு மாடுகள், மான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி இரவு நேரங்களில், விவசாய நிலங்களுக்கு வந்து செல்கின்றன.சீளியூர் தெற்கு பகுதியில் விவசாயி ஒருவர், இரண்டு ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்களை பயிர் செய்துள்ளார். இவை நன்கு வளர்ந்து காய் விடும் நிலையில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, நான்கு காட்டு யானைகள் தென்னந் தோப்பில் புகுந்து, மரங்களை கீழே தள்ளி, குருத்துகளை சாப்பிட்டுள்ளன. இதில், 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு கீழே சாய்ந்துள்ளன. இதுசம்பந்தமாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட விவசாயி கூறியதாவது:தென்னை நடவு செய்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. தற்போது மரங்களில் காய்கள் விடும் நிலையில் தென்னை மரங்கள் வளர்ந்துள்ளன. இதுவரை 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். இந்நிலையில் காட்டு யானைகள் தென்னந் தோப்பில் புகுந்து, 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தி உள்ளன.வனத்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், ஆய்வு செய்து சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.