உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூமியின் இரு துருவங்களுக்கும் பயணித்த 60 வயது இளைஞர்கள்!

பூமியின் இரு துருவங்களுக்கும் பயணித்த 60 வயது இளைஞர்கள்!

சென்னையைச் சேர்ந்த மூன்று ஓய்வு பெற்ற தமிழர்கள், அன்டார்டிகாவின் பனி படர்ந்த அமைதியிலிருந்து, ஆர்க்டிக்கின் வனப்புடன் கூடிய பனி நிறைந்த கடல், மலைகள் வரை பயணித்து... 'கனவுகளை நிஜமாக்க வயது ஒருபோதும் தடையில்லை' என, நிரூபித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த 60 வயது கடந்த நண்பர்களான சந்திரசேகரன், ராஜு, வெங்கடேசன் ஆகியோர் ஒரு அசாதாரண முடிவை எடுத்தனர்; பலரும் நினைத்துக்கூட பார்க்காத இடங்களில் காலடி வைக்கவேண்டும் என்பதே அது. அந்த புதிய இலக்கு வெளிநாடுகளில் பல ஆண்டுகள் உயர் நிர்வாகிகளாக பணியாற்றிய இவர்கள் ஒவ்வொருவரும், 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணித்துள்ளனர். 2023-ல், தங்கள் பயணப் பட்டியலில் ஒரு புதிய இலக்கை நிர்ணயித்தனர். அது, அன்டார்டிகா, ஆர்க்டிக் துருவங்களிலும் பயணிக்க வேண்டும் என்பது... அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரியில், வழிகாட்டிகள் உதவியுடன் மூவரும் சிலியின் புன்டா அரினாசிலிருந்து உலகின் தெற்கே பயணத்தை தொடங்கி, தங்களின் கனவை நிறைவு செய்தனர். பயண அனுபவம் குறித்து சந்திரசேகரன், ராஜு, வெங்கடேசன் கூறியது: ஒவ்வொரு நாளும் ஜோடியாக படகுகளில் பயணித்து கரையோரம் ஓய்வெடுத்தோம். பனிக்கடலில் மூழ்கி எழும்போது உருகும் பனிக்கட்டிகளின் ஓசையும், அதன் பின்னுள்ள பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் அனுபவித்தோம். ஏழாவது கண்டத்தில் காலடி வைத்த அந்த தருணம், எங்கள் ஆன்மாவையும் தொட்டுவிட்டது. அதன் பின் அங்கிருந்து வெளியேறி சிலி, படகோனியாவில் உள்ள ஒரு தேசிய பூங்காவை சுற்றிப்பார்த்தோம். மக்கள் வாழும் கடைசி இடம் தெற்குத்துருவ சாதனையின் ஊக்கத்துடன், வடதிசை நோக்கி பயணித்தோம். 2025, ஜூலை, கப்பலில் ஸ்வால்பார்ட் (நார்வேயின் தலைநகருக்கு மிக மேலே ஆர்ட்டிக் வளையத்தில் இருக்கும் வனாந்தரத் தீவுகளின் தொகுப்பு) ஆர்க்டிக் பயணத்தை தொடர்ந்தோம். கொபன்ஹேகனில் இருந்து விமானத்தில் 'லாங்கியர்' நகரம் சென்றோம். அது தான் உலகின் வடதிசையில் மக்கள் வாழும் கடைசி இடம். அங்கு தான் எங்களின் ஆர்க்டிக் பயணம் தொடங்கியது; மற்றொரு உலகத்தில் பயணிப்பது போல் இருந்தது. பயணத்தின் முடிவில் நாங்கள் பெற்ற அனுபவம் அளவிலாதது. மறக்க முடியாத தருணங்கள் பனி நீரில் மூழ்கும் அரிதான 'டபுள் டிப்' சாதனை புரிந்ததை மறக்க இயலாது. உறைநிலை தாண்டி நடுங்க வைக்கும் குளிர், கடல் பயணத்தினால் உடல் நிலை மாற்றங்கள், சைவ உணவு பற்றாக்குறை இவை அனைத்தையும் கடந்து, மனதில் தங்கியது ஒன்றே ஒன்று... அது, அரிய பயணத்தின் ஆனந்தமும், வெண்பனி சூழல் அளிக்கும் வலிமையான அமைதியின் வெளிப்பாடும். சூரியன் மறையாத நள்ளிரவில், கப்பலின் மேல் தட்டில் அமர்ந்து, சூடான சாக்கலேட் பானம் அருந்தி இயற்கையோடு நாங்கள் ஒன்றிப்போன கணமும், பனிப்பாறைகள் உருகி முறிந்து, கடல் நீரில் விழும் ஓசையும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நிழலாடிக்கொண்டே இருக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ