கல்வி உதவித் தொகை திட்டத்தில் 7,109 மாணவ, மாணவியர் சேர்ப்பு
கோவை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்த மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கு, பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாதென்கிற நோக்கத்தில், தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் என்கிற திட்டங்களின் கீழ், மாதந்தோறும் 1,000 ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில், 63,239 மாணவர்கள், தமிழ் புதல்வன் திட்டத்தில், 47,319 மாணவர்கள் கடந்த கல்வியாண்டுகளில் பயனடைந்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில் இவ்விரு திட்டங்களிலும் சேர்த்து, இரண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும், 37,288 பேரும், முதலாமாண்டில் 7,109 பேரும் பயன்பெறுகின்றனர். மாவட்ட சமூக நலத்துறை திட்ட அதிகாரி அம்பிகா கூறுகையில், ''நடப்பாண்டில் முதலாமாண்டு சேர்ந்த கலை, அறிவியல் பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்கள் தாமாக முன்வந்து இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரிவிக்கவேண்டும். உடனடியாக விண்ணப்பித்தால், இம்மாதம் முதலே உதவித்தொகை வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும். பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிற பிரிவு சேர்க்கை நடந்து வருவதால், மாணவர்கள் சேர்க்கை முடிந்ததும் விண்ணப்பிக்க வேண்டும். வங்கிக்கணக்கு, ஆதார் தகவலை சரியாக இணைத்து விண்ணப்பித்தால் போதுமானது,'' என்றார்.