சிறுவாணியில் இருந்து கோவைக்கு 7.45 கோடி லிட்டர் தண்ணீர் தருவிப்பு
கோவை : சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் நீர் மட்டம், 32.73 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து, 7.45 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்து வரும் தொடர் மழையால், சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 90 மி.மீ., அடிவாரத்தில் 70 மி.மீ., மழை பதிவானது. 32.73 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது; அணையின் மொத்த உயரம், 50 அடி. ஒப்பந்தப்படி, அணையில் இருந்து, 10.1 கோடி லிட்டர் எடுக்கப்படும். தற்போதுள்ள சூழலில், நேற்றைய தினம், 7.45 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. கடந்த வாரம், 6 கோடி லிட்டரே எடுக்கப்பட்டது. தற்போது நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருவதால், எடுக்கப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 45 அடிக்கு நீர் மட்டம் உயரும்போது, 10.1 கோடி லிட்டர் தருவிப்பதற்கு வாய்ப்புள்ளது.வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''முன்பே எதிர்பார்த்தது போல் வெள்ளிக்கிழமை வரை, மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் பாலக்காடு கணவாய் பகுதியில் மிக கனமழை தொடரும். கோவை நகர் பகுதியில் நாளை (இன்று) மற்றும் நாளை மறுநாள் (நாளை) லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளுக்கு கனமழை தொடரும். சனிக்கிழமை முதல், தென்மேற்கு பருவமழை தீவிரம் வெகுவாக குறையக்கூடும். கொங்கு சமவெளிப் பகுதிகளில், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது சாரல் அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது,'' என்றார்.
மழைப்பொழிவு எவ்வளவு
கோவை மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையளவு:தொண்டாமுத்துார் - 11 மி.மீ., வாரப்பட்டி - 6.30, மதுக்கரை - 6, போத்தனுார் - 5.40, பொள்ளாச்சி - 64, மாக்கினாம்பட்டி - 65.60, கிணத்துக்கடவு - 20, ஆனைமலை - 15, சின்கோனா - 50, சின்னக்கல்லார் - 146, வால்பாறை - 64, சோலையார் - 105 மி.மீ., மழை பதிவானது.