அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு தீக்காய சிகிச்சை
கோவை: பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீக்காயம் காரணமாக, 8 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில், ஆறு பேர் குழந்தைகள். தீபாவளி தினத்தன்று காலை 9:30, மாலை 6:30 மற்றும் 21ம் தேதி காலை, 10:00 மணி என்று நேரம் வாரியாக தீ விபத்துக்காக சிகிச்சை எடுத்தவர்கள் விவரம், மாநில அளவில் தொகுக்கப்பட்டது. டீன் கீதாஞ்சலி கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில், 20 படுக்கை வசதியுடன் பிரத்யேக வார்டு, தீக்காயங்கள் சார்ந்த பெரிய விபத்துக்களுக்கு ஒதுக்கப்பட்டது. சிறிய காயத்துடன் வந்தவர்கள், அந்தந்த வார்டுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தீபாவளி காலை முதல் இன்று (நேற்று) மதியம் வரைஆறு குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் பட்டாசு காயத்துக்கு சிகிச்சை பெற்றனர். இதில், மூன்று குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள ஐந்து பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். மூன்று குழந்தைகளில் ஒரு 10 வயது பெண் குழந்தை, 10 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டது. பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கண் சிகிச்சை பிரிவில், உள் நோயாளிகளானகுழந்தைகள் மூவர், பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.