உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்திய மலர் ஏற்றுமதிக்கு மலர்ச்சியான எதிர்காலம்; வேளாண் பல்கலை கருத்தரங்கில் தகவல்

இந்திய மலர் ஏற்றுமதிக்கு மலர்ச்சியான எதிர்காலம்; வேளாண் பல்கலை கருத்தரங்கில் தகவல்

கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அலங்கார தோட்டக்கலை குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கு, நேற்று துவங்கியது.துவக்க விழாவுக்கு தலைமை வகித்து, பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் பேசுகையில், “மலர் சாகுபடியில் இந்தியா உலகளவில் 2வது இடத்தில் இருந்தாலும், ஏற்றுமதியில் 14வது இடத்தில் இருக்கிறோம். வரும் 2030ல் இந்திய மலர் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன, மலரியல் துறை இயக்குநர் பிரசாத் பேசுகையில், “இந்தியாவில் மலர் சாகுபடி 3.1 லட்சம் ஹெக்டரில் மேற்கொள்ளப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினரின் செலவு செய்யும் திறன் அதிகரிக்கும்போது, இத்துறையும் வளர்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் வரும் 2030ல் இந்தியாவில் இத்துறை சிறப்பான வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது” என்றார்.மத்திய அரசின் மலரியல் துறை முன்னாள் இயக்குநர் தத்லானி பேசுகையில் “நாம் ஏராளமான புது ரகங்களை உருவாக்குகிறோம். அவை வர்த்தக பயன்பாட்டுக்கு வருகின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். ஓர் ஆய்வுத் திட்டத்தை மேற்கொண்டால், அது தற்போதைய மற்றும் வருங்கால சிக்கலுக்குத் தீர்வைத் தருகிறதா என உறுதி செய்வது அவசியம். எந்த ஓர் ஆய்வும், கண்டுபிடிப்பும் அதன் இறுதிநிலை நுகர்வோருக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும். மலரியல் துறையில் அபரிமிதமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன” என்றார்.பல்கலை மலரியல் துறை தலைவர் கங்கா கூறுகையில், ''13 மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். மலர் சாகுபடி தொழில்நுட்பத்தில் இருந்து, ஏற்றுமதி வரை அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இக்கருத்தரங்கில் பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை வகுக்க முடியும்” என்றார்.கருத்தரங்கில், ஆய்விதழ்கள், புத்தகங்கள் வெளியிடப்பட்டன. எஸ்.ஆர்.எம்., வேளாண் அறிவியல் கல்லூரி டீன் ஜவஹர்லால், பல்கலையின் தோட்டக்கலைத் துறை டீன் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை