உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகளுக்கு பயந்து தீவனப் பயிரை இலவசமாக கொடுக்கும் விவசாயி!

யானைகளுக்கு பயந்து தீவனப் பயிரை இலவசமாக கொடுக்கும் விவசாயி!

கோவை; தடாகம் பகுதியில், யானைகள் புகுந்து விடும் என்ற அச்சத்தில் தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்துள்ள மாட்டுத் தீவனப் பயிரை இலவசமாக வழங்க முன்வந்துள்ளார் விவசாயி.தடாகம் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:போலீஸ் நிலையம், வனக்காவலர் குடியிருப்பு அருகில் தோட்டம் இருக்கிறது. முன் யானைகள் தக்காளி, வாழை, கரும்பு இவற்றைத்தான் உண்டு வந்தன. தற்போது, முருங்கைக்கையை கூட விட்டுவைப்பதில்லை. எனவே, யானைகளின் உணவல்லாத பயிர்களைச் சாகுபடி செய்கிறோம். இந்திய காடுகளுக்கு வெளியே மரம் வளர்க்கும் திட்டத்தின் (டோபி) கீழ், 50 வகையான மரங்களை வளர்த்து வருகிறோம்.மாட்டுத் தீவனத்துக்காக கோ-4 தீவனப் பயிர் சாகுபடி செய்திருந்தோம். மாடுகளுக்கு தவிடு, புண்ணாக்கு வைத்திருந்தால், அவற்றையும் யானைகள் விட்டுவைப்பதில்லை. மாட்டுக் கொட்டகையையும் உடைத்து விடுகின்றன. மாடுகள் குறுக்கே நின்றால், அவற்றையும் தாக்குகின்றன.எனவே, மாடு வளர்ப்பைக் கைவிட்டுவிட்டோம். இயற்கை விவசாயம் என்பதால், கோ-4 தீவனப் பயிரையும் டிராக்டர் பயன்படுத்தி அழிக்க முடியவில்லை. மழைக்கு நன்றாக வளர்ந்துள்ளது. இதை யானைகள் சாப்பிட்டால் பரவாயில்லை. ஆனால், அதையும் தாண்டி வந்து, தென்னை மரங்களுக்கு சேதம் விளைவித்துவிடும் என்ற அச்சம் உள்ளது.பட்டாசுக்கு யானை பயப்படுவதில்லை. விளை நிலங்களில் குறிப்பாக இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பயிர்களை ருசி கண்டுவிட்ட யானைகள் திரும்பத் திரும்ப வருகின்றன. வனத்துறையிடம் இழப்பீடு பெறுவது மிகக் கடினம். கடந்த 3 ஆண்டுகளாக இழப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதே இல்லை. வீட்டுக் கதவுகளை உடைத்து விட்டால், வேளாண் பொறியியல் துறைக்கு அலைய வேண்டும்.இதனால்தான், யானைகளின் உணவல்லாத பயிர்களுக்கு மாறினோம். தற்போது கோ-4 மழைக்கு நன்கு விளைந்துள்ளது. யாரேனும் விவசாயிகள் தேவைப்பட்டால் இலவசமாகவே வந்து அறுத்துச் செல்லலாம்.வனத்துறை யானைகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ