ரேடியோ காலர் பொருத்தி கண்காணித்த வரையாடு பலி
கூடலூர்:நீலகிரி மாவட்டம், முக்கூர்த்தி தேசிய பூங்காவில், 'வெஸ்டர்ன் கேச்மென்ட்' வனப்பகுதியில், 8 வயது பெண்; 4 வயது ஆண் வரையாடுகளுக்கு, 2024 டிச., 6ல் 'ரேடியோ காலர்' பொருத்தப்பட்டது. அதில், பெண் வரையாடு அப்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதன் வயிற்றில் மூன்று மாத குட்டியும் இருந்தது. 'அதன் உள் உறுப்புகள் பலவீனமடைந்து இறந்தது' என, வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. தொடர்ந்து, ரேடியோ காலர் பொருத்தப்பட்ட, மற்றொரு வரையாட்டை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். ரேடியோ காலர் சிக்னல் அடிப்படையில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது, 'டிலில் ஸ்கேப்' நீரோடை அருகே, ஆடு இறந்து கிடந்தது. அதன் தலைப்பகுதியில் 'ரேடியோ காலர்' கண்டறியப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த வரையாட்டை புலி தாக்கி, அதன் உடல் பாகங்களை உட்கொண்டுள்ளது. கழுத்தில் இருந்து 'ரேடியோ காலர்' மீட்கப்பட்டுள்ளது' என்றனர்.