மேலும் செய்திகள்
வாகனங்களை மறித்த யானை; சுற்றுலா பயணியர் அச்சம்
09-Oct-2025
வால்பாறை: வால்பாறை -- அதிரப்பள்ளி ரோட்டில் அரசு பஸ்சை 'கபாலி' என்ற யானை மீண்டும் வழிமறித்தது. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் சென்று வருகின்றனர். வால்பாறையில் இருந்து மளுக்கப்பாறை வழியாக, அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில் 'கபாலி' என்று பெயரிடப்பட்ட யானை அடிக்கடி ரோட்டின் குறுக்கே நின்று வாகனங்களை வழிமறித்து தாக்கி வருகிறது. இரு நாட்களுக்கு முன், 'கபாலி' யானை 18 மணி நேரம் ரோட்டில் முகாமிட்டதால், போக்குவரத்து பாதித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 5:10 மணிக்கு சாலக்குடியிலிருந்து மளுக்கப்பாறைக்கு கேரள அரசு பஸ் இயக்கப்பட்டது. அதிரப்பள்ளியை கடந்து மளுக்கப்பாறை செல்லும் வழியில், இரவு, 8:30 மணிக்கு கபாலி யானை பஸ்சை வழிமறித்தது. இதனையடுத்து பஸ் டிரைவர்கள் பஸ்சை பின்நோக்கி இயக்கினார். ஆனால், பஸ் பள்ளத்தில் சிக்கியது. பின்னால் வந்த வனச்சரக அலுவலர் ஆல்வின்ஆண்டனி தலைமையிலான வனத்துறையினர், யானையை விரட்டிய பின் அரசு பஸ்சில் பயணம் செய்த, 20 பயணியரை வனத்துறை வாகனத்தில் ஏற்றி மளுக்கப்பாறைக்கு அழைத்து சென்றனர். அதன்பின் அரசு பஸ் சரிசெய்யப்பட்டு, மீண்டும் இயக்கப்பட்டது. யானையிடம் வம்பு அதிரபள்ளி ரோட்டில் கடந்த, 19ம் தேதி இரவு, கபாலி யானை அந்த வழியாக வந்த சுற்றுலா வாகனங்களை வழிமறித்தது. அப்போது, இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணியர் யானைக்கு மிக அருகில் வாகனத்தை கொண்டு சென்று கூச்சலிட்டனர். இதனால், மிரண்ட யானை இரண்டு சுற்றுலா வாகனங்கள், நான்கு பைக்குகளை சேதப்படுத்தியது. வாகனத்தை முண்டியடித்துக்கொண்டு, யானையிடம் வம்பு செய்த கோவையை சேர்ந்த நான்கு சுற்றுலா பயணியர் மீது வழக்குப்பதிவு செய்து, கேரள வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
09-Oct-2025