உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் ஸ்டேஷனில் துாக்கில் தொங்கியவர்; கோவை பொியகடை வீதியில் பரபரப்பு சம்பவம்

போலீஸ் ஸ்டேஷனில் துாக்கில் தொங்கியவர்; கோவை பொியகடை வீதியில் பரபரப்பு சம்பவம்

கோவை; கோவை நகர்ப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில், எஸ்.ஐ., அறைக்குள் சென்ற ஒருவர், அங்குள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'லாக் அப்' மரணத்தை மறைக்க, போலீசார் நாடகமாடுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 'சிசி டிவி' காட்சிகளை, போலீசார் வெளியிட்டனர். கோவை கடை வீதி போலீஸ் ஸ்டேஷனில், சட்டம் - ஒழுங்கு பிரிவு தரைத்தளத்திலும், குற்றப்பிரிவு முதல் தளத்திலும் செயல்படுகின்றன. நேற்று காலை, 8:00 மணிக்கு, 'ரோல் கால்' முடிந்ததும் போலீஸ்காரர் செந்தில்குமார் (எண்: 2102), குற்றப்பிரிவு எஸ்.ஐ., அறையை திறக்க முயன்றார். கதவு உள்பக்கமாக மூடப்பட்டிருந்தது. தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து சென்றிருக்கிறார். உள்ளே மின் விசிறியில் ஒருவர், வேஷ்டியால் துாக்கிட்டு தொங்குவதை பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். முதல்கட்ட விசாரணை முதல்கட்ட விசாரணையில், துாக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு, 11:19 மணிக்கு கடை வீதி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தவர் என தெரிந்தது. அங்கிருந்த தலைமை காவலர் செந்தில்குமாரிடம், 'தன்னை, 25க்கும் மேற்பட்டோர் கொலை செய்ய துரத்தி வருகின்றனர்' என கூறியுள்ளார். ஸ்டேஷனுக்கு வெளியே வந்து, யாரேனும் துரத்தி வருகிறார்களா என தலைமை காவலர் பார்த்தபோது, யாரும் தென்படவில்லை. அவரது செயல்பாடு, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால், காலையில் வருமாறு கூறியிருக்கிறார். அச்சமயத்தில் வந்த போன் அழைப்பை ஏற்க, தலைமை காவலர் ஸ்டேஷனுக்குள் சென்றிருக்கிறார். அப்போது, ஸ்டேஷனுக்கு வந்த நபர், முதல் மாடியில் உள்ள குற்றப்பிரிவு எஸ்.ஐ., அறைக்குச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை கடை வீதி போலீஸ் ஸ்டேஷன் முதல் தளத்தில் உள்ள எஸ்.ஐ., அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்த அறிவொளி ராஜன்,60; சகோதரி வீரமணி மற்றும் தாயாருடன் வசித்து வந்துள்ளார். திருமணம் ஆகாதவர். சென்டிரிங் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இரு நாட்களாக அவரது நடவடிக்கை மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும், தன்னை யாரோ கொல்ல வருவதுபோல் உள்ளது என்றும், மூத்த சகோதரியிடம் கூறியுள்ளார். இன்று (நேற்று) காலை, 8:00 மணிக்கு ஸ்டேஷன் பாராவில் இருந்த போலீஸ்காரர் செந்தில்குமார், அலுவல் நிமித்தமாக முதல் தளத்துக்கு சென்று எஸ்.ஐ., கதவை திறக்க முயன்ற போது, உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, அறிவொளி ராஜன் துாக்கில் தொங்கி இறந்த நிலையில் பார்த்துள்ளார். தடய அறிவியல் துறை நிபுணர்கள், புகைப்பட நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இறந்தவரின் சட்டைப்பையில் காணப்பட்ட அடையாளத்தின்படி, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தை, 'லாக் அப் டெத்' என்று சொல்ல முடியாது. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ஒரு தற்கொலை. ஸ்டேஷனுக்கு கதவு இல்லை. பொதுமக்கள் வர வேண்டும் என்பதற்காக, அவ்வாறு வைத்திருக்கலாம். இப்போது, கதவை மாட்டச் சொல்லி இருக்கிறோம். 'சிசி டிவி' காட்சி பதிவுகளை வைத்து, விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார். போலீசார் பணியிட மாற்றம் போலீஸ் ஸ்டேஷனில், கவனக்குறைவாக பணியாற்றியதால், தலைமை காவலர் செந்தில்குமார், எஸ்.ஐ., நாகராஜ் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 'லாக் அப்' மரண மாக இருக்குமோ என்கிற சந்தேகம் பரவலாக எழுந்தது. அதனால், தற்கொலை செய்தவர் ஸ்டேஷனுக்கு எவ்வழியில் வந்தார், அவரது செயல்பாடுகளுடன் கூடிய 'சிசி டிவி' காட்சிகளை, போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மனச்சிதைவு நோயும் எதிர்மறை எண்ணமும்

மூளையில் 'டோப்பமின்' ரசாயனம் அதிகளவில் சுரப்பதால் மனச்சிதைவு ஏற்பட்டு தற்கொலை எண்ணம் ஏற்படும் என, மனநல மருத்துவர் சீனிவாசன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மனச்சிதைவு நோய் உள்ளவர்களுக்கு மாயக்குரல் கேட்கும். யாரும் பேசாதபோது, தன்னை பற்றி யாரோ பேசுவது போன்ற உணர்வு ஏற்படும். யாரோ தன்னை பற்றி தவறாக பேசுவதாக எண்ணிக் கொள்வர். மனதில் எதிர்மறையான எண்ணம் ஏற்படும். அதாவது தன்னை யாராவது துரத்துகின்றனர்; உணவில் விஷம் வைக்கின்றனர் போன்ற எண்ணங்கள் ஏற்படும். மனதில் ஏற்படும் எண்ணங்களில், எது உண்மை எது பொய் என்ன என்பதை பிரித்தறிய முடியாது. இதுதவிர, இவர்களுக்கு மாய உருவம் தோற்றமளிக்கும். அதாவது இல்லாத ஒரு உருவம் தங்கள் முன் இருப்பதாகவும், அந்த உருவம் சொல்லும் விதத்தில் நடந்து கொள்ளும் நிகழ்வும் ஏற்படும். மூளையில் 'டோப்பமின்' ரசாயனம் அதிகளவு சுரப்பதால், இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னை, 100ல் ஒருவருக்கு வரலாம். பரம்பரையாக வருவதற்கும் வாய்ப்பு உண்டு. இது ஒரு முதிர் மனநோய். தீவிர மனநோய் வகையை சார்ந்தது. ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் குணப் படுத்த முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

கேள்விகளுக்கு பதில் இல்லை

தற்கொலை செய்த அறிவொளி ராஜன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீஸ் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சை பெற்று வருபவரா என்பது குறித்து போலீசாருக்கு தெரியவில்லை. பின் எதன் அடிப்படையில், மன நலம் பாதித்தவர் என்கிற முத்திரையை குத்துகிறது என்கிற கேள்வி எழுகிறது. குற்றப்பிரிவு எஸ்.ஐ.,பணியில் இல்லாதபோது, அவரது அறை ஏன் பூட்டப்படவில்லை. மறுநாள் காலை 'ரோல்கால்' முடிந்த போலீஸ்காரர், எஸ்.ஐ., அறைக்கு எதற்காகச் சென்றார் என்பதற்கும் பதில் இல்லை. நான்கு முழ வேஷ்டியால் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொள்ள முடியுமா என்கிற சந்தேகத்துக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீசார் இருக்கின்றனர். இக்கேள்விகளுக்கு அடுத்தகட்ட விசாரணையில் பதில் கிடைக்கும் என்கின்றனர், போலீஸ் அதிகாரிகள்.

'போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல பொதுமக்கள் அஞ்சும் நிலை'

பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் மீது தாக்குதல், தற்கொலை அல்லது போலீசார் மீது தி.மு.க., கட்சியினர் தாக்குதல், இன்னொரு புறம், காவல்துறை சுதந்திரமாக செயல்படாமல் விட்டதால், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. போலீஸ் ஸ்டேஷன்களில் அடிப்படை வசதிகள் இல்லை. காவலர்களுக்கு ஆணையம் அமைக்கப்பட்டு, அவர்களின் குறைகளை நீக்க, ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் இல்லை. காவல்துறையின் செயல்பாடு குறித்து ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் மக்களின் குறைகளை போக்கும் இடம் என்பது மாறி, போலீஸ் ஸ்டேஷனுக்கு மக்கள் செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, வானதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ