சாலை வழியே வந்த மலை ரயில் இன்ஜின்
மேட்டுப்பாளையம்; திருச்சி ரயில்வே பணிமனையில், பழுது சரி செய்த ஊட்டி மலை ரயில் இன்ஜின், ராட்சத டிரக்கில் மேட்டுப்பாளையம் கொண்டு வந்தனர். ரயில் இன்ஜின்களையும், பெட்டிகளையும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பழுதுகளை சரி செய்து, பெயிண்ட் அடித்து, புதிய இன்ஜினாக மாற்றுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்சி பொன்மலை ரயில்வே ஸ்டேஷனுக்கு, 37397 என்ற ரயில் இன்ஜினை பழுதுகளை சரி செய்ய கொண்டு சென்றனர். பழுதுகளை சரி செய்து பெயிண்ட் அடித்து, ஓட்டுவதற்கு தயார் நிலையில் வைத்தனர். திங்கட்கிழமை மாலை, 3:00 மணிக்கு, 24 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் இன்ஜின் ஏற்றப்பட்டது. அங்கிருந்து சாலை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு நேற்று காலை, 7:00 மணிக்கு கொண்டு வந்தனர். மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், இரண்டு ராட்சத கிரேன்கள் வாயிலாக, ஊட்டி மலை ரயில் இன்ஜினை, தண்டவாளத்தில் இறக்கி வைத்தனர். அதேபோன்று பழுதுகளை சரி செய்ய, 37392 என்ற இன்ஜினை, டிரக்கில் ஏற்றி திருச்சி பொன்மலை ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். ரயில் இன்ஜின்களை இறக்கி ஏற்றும் பணிகளில், ரயில்வே பணியாளர்களும், கிரேன் பணியாளர்களும் ஈடுபட்டனர்.