உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டாய மதமாற்றம் தடுக்க தனி சட்டம் தேவை! சப் - கலெக்டரிடம் வலியுறுத்தல்

கட்டாய மதமாற்றம் தடுக்க தனி சட்டம் தேவை! சப் - கலெக்டரிடம் வலியுறுத்தல்

பொள்ளாச்சி: கட்டாய மத மாற்றத்தை தடுக்கும் வகையில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும், என, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தினர். பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் கவுதம் லிங்கராஜ் கொடுத்த மனுவில், 'இங்கு அனைத்து மதத்தினரும், ஜாதியினரும் ஏற்றத்தாழ்வின்றி வாழ்கின்றனர். இதில், சிலர், கட்டாய மத திணிப்பு செய்கின்றனர். இது எந்த மதத்தவர் செய்தாலும் குற்றமே ஆகும். எனவே, மதமாற்றத்தை தடுக்க விரைவில், தனி சட்டம் அமல்படுத்த வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளார்.* விவேகானந்தா சேவா மையம் அமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி அரசுப்பள்ளிக்கு சென்ற, 14வயது சிறுமியை சின்னாம்பாளையம் ஜெபக்கூடத்துக்கு அழைத்து சென்று மதமாற்றம் செய்ய முயற்சித்துள்ளனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட நர்ஸ் மற்றும் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முற்றுகை போராட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, சட்டவிரோதமாக செயல்படும் ஜெபவீட்டை பூட்டி 'சீல்' வைக்க வேண்டும். மத மாற்றத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி விடுமுறையில் குழந்தைகளை அழைத்துச் சென்று மதமாற்றம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.* அனுப்பர்பாளையம் அருந்ததியர் குடியிருப்பு பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:அனுப்பர்பாளையம் மதுரை வீரன் கோவில் அருகே, அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகளில் வசிக்கிறோம். கோவிலுக்கு மேற்கு புறமாக உள்ள குடியிருப்புகளுக்கு, கிழ மேற்காக ஒரு கான்கீரிட் சாலையும், வடபுறம் கிழ மேற்காக கான்கிரீட் சாலையும் உள்ளன. இந்நிலையில், இந்த இரண்டு சாலைக்கு நடுவே ஒரு கான்கிரீட் சாலை அமைப்பதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் கான்கிரீட் சாலை தேவையில்லை. இங்கு சாலை அமைத்து தருவோம் எனக்கூறி வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையை அப்புறப்படுத்த வற்புறுத்துகின்றனர்.இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ