பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் போனுக்கு தனி பாதுகாப்பு அறை
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஒப்படைக்கப்படும் மொபைல்போன்களை, திரும்ப பெற்று செல்வதில், காலதாமதம் ஏற்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இக்கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள், மொபைல் போன்களை எடுத்து செல்ல, கடந்த 24ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இதற்காக, கோவிலுக்குள் நுழைந்ததும், வலதுபுறம் தனி அறை அமைக்கப்பட்டு, பக்தர்களின், மொபைல்போன்களை பெற்று, 5 பணியாளர்கள் டோக்கன் வழங்குகின்றனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் முடித்து வரும்போது, டோக்கன் கொடுத்துவிட்டு, மொபைல்போன்களை திரும்ப பெற்றுச்செல்ல, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்து, மொபைல்போனை பெற்று செல்ல வேண்டியுள்ளதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலாவிடம் கேட்டபோது, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையிலேயே, மொபைல் போன்கள் பெற்று வருகிறோம். கோவில் மைதானத்தில், மொபைல்போன் பாதுகாப்பு அறை தனியாக அமைக்கப்படுகிறது. இந்த அறை அமைந்ததும், பக்தர்கள் காத்திருப்பது தவிர்க்கப்படும்,என்றார்.