பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஒற்றை யானை விசிட்
தொண்டாமுத்தூர்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில், ஒற்றை காட்டு யானை கடந்த ஒரு மாதமாக, இரவு நேரங்களில் உணவு தேடி வந்து செல்கிறது.போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வனப்பகுதியில், பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில், வனப்பகுதியில் அமைந்துள்ளதால், இரவு, 7:00 மணிக்கு வழக்கமாக கோவில் நடை அடைக்கப்படும். இந்நிலையில், பூண்டி வனப்பகுதியில் சுற்றி வரும் ஒற்றைக்காட்டு யானை, கடந்த ஒரு மாதமாக, கோவில் வளாகத்தில் உணவு தேடி வந்து செல்கிறது.வளாகத்தில் உள்ள கடைகளை உடைத்து, அங்குள்ள உணவுகளை உண்டு செல்கிறது. நேற்றுமுன்தினம் இரவு, அமாவாசை தினம் என்பதால், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.இரவு 7:30 மணிக்கு, கோவில் வளாகத்திற்கு, ஒற்றைக்காட்டு யானை வந்தது. அதன்பின், அங்குள்ள ஒரு அன்னதான மடத்தின் முன்பு சென்று, அங்கு, பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குடித்தது. தொடர்ந்து, அருகில் இருந்த பிரசாத கடைக்கு சென்று, அங்கிருந்த பண்டங்களை உண்டது.தகவலறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானையை, வனத்திற்குள் விரட்டினர்.