கருவூலத்தை சுற்றிலும் கம்பி வேலி தேவை
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சார்நிலை கருவூலம் பின்பக்கம் குப்பை குவிந்துள்ளதால், சுகாதாரம் பாதித்து, துர்நாற்றம் வீசுகிறது.கிணத்துக்கடவு, எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே, சார்நிலை கருவூல அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் பின் பகுதியில் அதிகளவில் குப்பை மற்றும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இந்த குப்பைகள் கருவூல அலுவலக கட்டட ஜன்னல் பகுதியில் இருப்பதால், காற்றோட்டத்திற்காக ஜன்னல் திறக்கும் போது,அலுவலகத்தினுள் துர்நாற்றம் வீசுகிறது. அரசு அலுவலக வளாகம் அருகில் குப்பை குவிந்து கிடப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, கருவூல அலுவலகத்தை சுற்றிலும் தூய்மை பணிகள் மேற்கொண்டு சுத்தம் செய்து, அலுவலகத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.