தரமற்ற மருந்துகள் விற்பனை; 22 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
கோவை; கோவையில் புகாரின் பேரிலும், மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள் ஆய்வின் போதும் எடுக்கப்பட்ட, 500க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகளில், 22 மருந்துகள் தரமற்றவை என உறுதி செய்து, நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கோவையில், 2024 ஜன., முதல் டிச., இறுதி வரை, புகாரின் அடிப்படையிலும், சாதாரண ஆய்வுகளின் போதும், 500க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள், பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 22 மருந்துகள் தரமற்றவை என, பரிசோதனையின் முடிவில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவை மண்டல மருந்து கட்டுப்பாடுத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து கூறுகையில், '' கடந்தாண்டு, 500க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டதில், 22 மருந்துகள் தரமற்றவை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில், இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இப்பட்டியலில் உள்ளன. பிற பெரும்பாலும், வட மாநில தயாரிப்பு நிறுவனங்களின் மருந்துகள். இதில், 5 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாநிலங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 11 மருந்துகள் சார்ந்த நிறுவனங்கள் மீதான விசாரணை, இதுவரை முடியவில்லை,'' என்றார்.