உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கனிம வள கொள்ளை நடந்த நிலங்களை கறுப்பு பட்டியலில் சேருங்க! நீதிபதிகளிடம் தடாகம் குழு வலியுறுத்தல்

கனிம வள கொள்ளை நடந்த நிலங்களை கறுப்பு பட்டியலில் சேருங்க! நீதிபதிகளிடம் தடாகம் குழு வலியுறுத்தல்

கோவை: 'கோவை அருகே கனிமவளக் கொள்ளை நடந்த நிலங்களை, வருவாய்த் துறையின் கறுப்பு பட்டியில் சேர்க்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம், தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு வலியுறுத்தியது. கோவையில், வன எல்லையில் உருக்கு கம்பி வேலி அமைப்பது தொடர்பான வழக்கில், வேலி அமையும் இடங்களை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்களிடம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த கனிம வளக்கொள்ளை தொடர்பாக, தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர் நேரில் விவரித்தனர். சட்ட விரோத செங்கல் சூளை அவர்கள் அளித்த மனு: தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், சட்டவிரோத செங்கல் சூளைகளால் பல கோடி மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால், இப்பகுதியின் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் குறிப்பிடத்தக்க மேம்பாட்டைக் கண்டுள்ளது. 2010 முதல் 2021 வரை, கோவை வனக்கோட்டத்தில், 140 மனிதர்கள் யானை-மனித முரண்பாடுகளால் உயிரிழந்துள்ளனர். தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 53 உயிரிழப்புகள். 2019-20ல் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.நீதிமன்ற உத்தரவு அமல் படுத்தப்பட்ட பிறகு, கடந்த 4ம் தேதி வரை மூவர் மட்டுமே பலியாகினர். அதேசமயம், சட்ட விரோத செங்கற்சூளைகளால், 806 பிரம்மாண்ட பள்ளங்கள் உருவாகி, கர்நாடகாவின் பிரம்மகிரி முதல் கேரளத்தின் அமைதிப்பள்ளத்தாக்கு வரையிலான யானைகளின் வலசைப்பாதை கடுமையாக பாதித்துள்ளன. இக்குழிகளில் விழுந்து யானைகள் இறக்கின்றன. அரசியல் அழுத்தம் தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட கூட்டுக்குழு, சட்டவிரோத கனிமவளக் கொள்ளையால் பாதிக்கப்பட்ட இடங்களை மதிப்பீடு செய்தது. இதில், அரசியல் அழுத்தங்களால் 241 சூளைகள் மதிப்பீடு செய்யாமல் விடப்பட்டு, 565 சூளைகள் மட்டுமே மதிப்பிடப்பட்டன. அவற்றையும் குறைத்து மதிப்பிட்டு, ரூ.433 கோடி இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத செங்கற்சூளைகளுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவை வருவாய்த்துறை, கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முறையாக அமல்படுத்தவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட வேண்டும். கறுப்பு பட்டியல் சட்டவிரோத கனிமவளக் கொள்ளை நடந்த தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள அனைத்து நிலங்களையும் வருவாய்த்துறை வாயிலாக கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். இறுதித்தீர்ப்பு வரும் வரை, விற்பனை செய்ய இயலாத வகையில், பத்திரப்பதிவுத் துறையில் முடக்க வேண்டும். சுற்றுச் சூழல் சேதத்தை முழுமையாக மதிப்பிட்டு தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக குவிக்கப்பட்டுள்ள செங்கற்கள், கனிமங்களை முடக்கி பறிமுதல் செய்ய வேண்டும். சட்டவிரோத கனிம வளக்கொள்ளை நடந்த காலகட்டத்தில் பணிபுரிந்த, இதில் தொடர்புடைய அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். யானைகள் வலசைப் பாதையில் உள்ள ரிசார்ட்களுக்கான மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும். கோவை ஆனைகட்டி சாலையில், மாங்கரை தானிகண்டி யானை வலசைப் பாதையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையை (எண்:1577) அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ரிசார்ட்'களுக்கு சீல் வைக்கணும்!

கோவை மாவட்ட இருளர் சமூக நலச்சங்க தலைவர் மல்லன் அளித்த மனு: ஆனைகட்டி பகுதியில், 1918ல் பிரிட்டிஷ் அரசு, எங்கள் குடும்பத்துக்கு 5 முதல் 10 ஏக்கர் நிலத்துக்கான இலவச பட்டா வழங்கியது. இந்நிலங்களை பல்வேறு முறைகளில் ரிசார்ட்களுக்காக கையகப்படுத்தி வருகின்றனர். புதிதாக ரிசார்ட் கட்டி வணிகம் செய்வோருக்கு யானைகள் எதிரிகளாக தென்படுகின்றன. அவற்றை விரட்ட முயற்சிக்கின்றனர். அவை ஊருக்குள் புகுந்து விடுகின்றன. காலம் காலமாக அமைதியுடன் கடந்து சென்ற யானைகள், தற்போது, தாக்கத் துவங்கியுள்ளன. இரவு நேர நடமாட்டம் உள்ள அந்தப் பிராணிகளை, ரிசார்ட்களில் இருந்து வரும் கூச்சலும் ஒளி விளக்குகளும் கலங்கடிக்கின்றன. அதனால், யானை வழித்தடங்களில் உள்ள ரிசார்ட்களை உடனடியாக மூடி, சீல் வைக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ