வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாடல் டமாரம் ஏன் ஒலிக்கவில்லை?
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை, பள்ளி நிர்வாகத்தினர் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த, பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள், சீருடைகள், ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில், சில அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகள் குறைவாக உள்ளதாக காரணம் கூறி, மாணவர்களை சேர்க்க தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.குறிப்பாக, வெள்ளக்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி, அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, பன்னிடை அரசு பள்ளிகளில் இந்நிலை தொடர்வதாக பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.இது குறித்து, அசோகபுரத்தில் வசிக்கும் தியாகராஜன் கூறுகையில், அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதில் பள்ளி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. அதே பள்ளியில் படித்த மாணவர்களை பிளஸ், 1ல் சேர்த்துக் கொள்கின்றனர். பிற பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை சேர்க்க தயக்கம் காட்டுகின்றனர். புதியதாக சேர்க்கைக்கு வரும் மாணவர்களை நாளை வாருங்கள் என்று கூறி, திருப்பி அனுப்புகின்றனர். தனியார் பள்ளிகளில் பெருந்தொகையை செலுத்தி, கல்வி கற்க முடியாதவர்கள் தான் அரசு பள்ளிக்கு வருகின்றனர். அவர்களை அரசு பள்ளியில் சேர்க்காமல் இருப்பதால், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியாமல் வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு ஆளாகின்றனர் என்றார். இது குறித்து வெள்ளக்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் செல்வ விநாயகம் கூறுகையில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அவர்களால் படிக்க முடியாத பிரிவு பாடங்களில் சேர்ந்து படிக்க விரும்புகின்றனர். அவர்களை பள்ளியில் சேர்க்க முடியாமல் போய்விடுகிறது. இப்பள்ளியில் தொழிற்கல்வி பிரிவு ஆசிரியர் ஓய்வு பெற்று, 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. புதிய தொழிற்கல்வி பிரிவு ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை.இதனால் அப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை தடைபட்டுள்ளது. இதே பள்ளியில், 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிற பிரிவு பாடங்களை படிக்க சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர் என்றார். இது குறித்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 8 மற்றும், 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள், 9 மற்றும் பிளஸ், 1 வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.
கோவை ஒரு தொழில்நகரம். தொழில் நிமித்தமாக ஆண்டு தோறும் பலர் குடும்பத்துடன் ஓர் இடத்தில் இருந்து இடம்பெயர்ந்து, இன்னொரு இடம் செல்கின்றனர். அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அங்குள்ள கீழ்நிலை பள்ளிகளில் படிக்காத குழந்தைகளை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர், சேர்த்துக் கொள்ள மறுப்பதால், குறிப்பிட்ட அந்த குழந்தைகளின் கல்வி பாதித்து, எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பிரச்னைக்கு தீர்வு காண பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி, அனைவருக்கும் கல்வி என்ற உன்னத நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என, கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாடல் டமாரம் ஏன் ஒலிக்கவில்லை?