உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கமிஷனரை முற்றுகையிட்ட அ.தி.மு.க.,வினர்; டெண்டரில் முறைகேடு நடப்பதாக புகார்

கமிஷனரை முற்றுகையிட்ட அ.தி.மு.க.,வினர்; டெண்டரில் முறைகேடு நடப்பதாக புகார்

வால்பாறை : வால்பாறை நகராட்சியில், டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி, அ.தி.மு.க.,வினர் கமிஷனரை முற்றுகையிட்டனர்.வால்பாறை நகராட்சியில், 28 பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளுக்காக நகராட்சி ஒப்பந்ததாரர்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணபித்தனர். இந்நிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒப்பந்தாரர்களுக்கு பணி வழங்கவில்லை எனக்கூறி அக்கட்சியினர் நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமையில் நகராட்சி கமிஷனர் விநாயகத்தை முற்றுகையிட்டனர்.டெண்டரை முறையாக நடத்த வேண்டும். பணிகளை அனைத்து ஒப்பந்தாரர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கூறி கமிஷனரிடம் முறையிட்டனர்.நகராட்சி கமிஷனர் விநாயகம் பேசும்போது, ''டெண்டர் விடுவதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. 'ஆன்லைன்' வாயிலாக முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும்,'' என்றார்.இதனையடுத்து அ.தி.மு.க.,வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தி.மு.க., அ.தி.மு.க., மோதல்

நகராட்சி கமிஷனரை சந்தித்துவிட்டு அ.தி.மு.க.,வினர் வெளியே வந்தனர். அப்போது, நகர துணை செயலாளர் (ஒப்பந்ததாரர்) பொன்கணேஷ், தி.மு.க., ஆட்சியில் முறையாக டெண்டர் விடுவதில்லை. கட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது என ஆவேசமாக பேசினார்.அப்போது, தி.மு.க., மாணவரணி செயலாளர் (ஒப்பந்ததாரர்) மணிகண்டபிரபுவுக்கும் இடையே டெண்டர் விடுவது குறித்து காரசார வாக்குவாதம் நடந்தது. இதனையடுத்து, சக ஒப்பந்தாரர்கள், அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை