அரசு, தனியார் சுற்றுச்சுவர்களில் விளம்பரங்கள்: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரிக்கை
கோவை; அரசு கட்டட சுற்றுச்சுவர்களை சேதப்படுத்தும் வகையில், விளம்பரங்கள் எழுதுவதை தடுப்பது குறித்த நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த, ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இயக்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வேலு அறிக்கை: தமிழ்நாடு திறந்த வெளி இடங்கள் (சிதைவைத் தடுக்கும்) சட்டம், 1959, சாலையோர இடங்கள், தனியார், அரசு கட்ட சுற்றுச் சுவர்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், மேம்பாலங்கள், மேம்பால தூண்கள் ஆகியவற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள், ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பேனர்கள் ஆகியவற்றைத் தடை செய்கிறது. இது ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.5000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கக்கூடிய குற்றமாகும். இச்சட்டத்தை அமல்படுத்துவது, உள்ளூர் போலீசாரின் கடமை. கோவையில், இச்சட்டமீறல்கள் அதிகரித்துள்ளன. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாவட்டப் பிரிவு, கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு நான்கு ஆண்டுகளில், ஐந்து முறையீடுகளை அனுப்பியுள்ளது. எவ்வித நடவடிக்கையும் இல்லை. திறந்த வெளிகளில் உள்ள, அனைத்து சட்டவிரோத விளம்பரங்களையும் ஒரு வாரத்துக்குள் அகற்றி, வரும், 20ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதை செயல்படுத்தவில்லை எனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் தலைமையகத்துக்கு அறிக்கை அளிக்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் முன்வர வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.