அன்னுார் மன்னீஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாக நடத்த ஆலோசனை
அன்னுார் : அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை, விமரிசையாக நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.'மேற்றலை தஞ்சாவூர்' என்று அழைக்கப்படும், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் 1,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடக்கிறது.இந்த ஆண்டு தேரோட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கோவில் வளாகத்தில் நடந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், ஜனவரி முதல் வாரத்தில் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழாவை துவக்கவும், இரண்டாவது வாரத்தில் தேரோட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.வள்ளி கும்மியாட்டம், சிறுவர், சிறுமியர் நாட்டியம், கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவு, பஜனை என அனைத்து நாட்களிலும் விமரிசையாக நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.கட்டளைதாரர்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்து ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அறநிலையத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, பேரூராட்சி, மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் இணைந்து அமைதி கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.ஆலோசனைக் கூட்டத்தில் அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.