உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சின்ன சின்னதாக வேளாண் செய்தி

சின்ன சின்னதாக வேளாண் செய்தி

வேளாண் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

கோவை, வேளாண் பல்கலையில், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் 1.06 லட்சம் சதுர அடி பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இடையே புதுமையான கண்டுபிடிப்புகள், அறிவுசார் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள வகை செய்கிறது. இம்மையத்துக்கும், கோவை பேச்சி புட்ஸ், மதுரை இன்னோ கிரீன் இந்தியா மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கும் இடையே, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவிகேசவன், இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், கலாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்னை சார் தொழில் வளர் மையம்

வேளாண் பல்கலை வளாகத்தில், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சக நிதியுதவியுடன், தென்னை பொருட்களை பதப்படுத்துவதற்கான இன்குபேஷன் மையம் நிறுவப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், அரசுசாரா நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் தொழில்முனைவோருக்கு, இந்த மையம் பயனுள்ளதாக இருக்கும்.

திசு வளர்ப்பு நுட்பங்கள் பயிற்சி

வேளாண் பல்கலையில், 4 நாட்கள், தாவர திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்து நேரடி பயிற்சி முகாம் நடந்தது. உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் திசு வளர்ப்பின் பங்களிப்பு, திசு வளர்ப்பில் இந்தியாவில் தேவை அதிகரித்துள்ள நிலையில் மனித வள பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டது. வேளாண், தோட்டக்கலை, வன மர இனங்களில் அதிக மகசூல் தரும், நோயற்ற பயிர்களைப் பெருக்கும் நடைமுறை நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தாவர உயிரி தொழில்நுட்ப துறை தலைவர் கோகிலா தேவி, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் செந்தில், இணை பேராசிரியர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேனீ வளர்க்க பயிற்சி

வேளாண் பல்கலையில், வரும் ஜூன் 6ம் தேதி, பூச்சியியல் துறை சார்பாக, தேனீ வளர்க்க ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. தேனீ இனங்களைக் கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மகரந்த சேர்க்கை வாயிலாக மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வரிகள் உட்பட ரூ. 590 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ