கரும்பு பூஸ்டர் பயன்படுத்த வேளாண் மாணவியர் அறிவுரை
பெ.நா.பாளையம் : கரும்பு நன்கு வளர, கரும்பு பூஸ்டரை விவசாயிகள் பயன்படுத்த முன்வர வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவியர், விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நான்காம் ஆண்டு படிக்கும் மாணவியர் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சின்னமத்தம்பாளையம் கிராமத்தில், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சியில் மாணவியர், விவசாயிகளை நேரடியாக சந்தித்தும், விபரங்களை சேகரித்தும், வேளாண் நிலங்களில், நேரடியாக பார்வையிட்டும், தேவையான தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்து வருகின்றனர். மேலும், விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் பயிற்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்த ஆய்வு மேற்கொண்டு, அதற்கான தீர்வுகளை வழங்கி வருகின்றனர். மேலும், வேளாண்மையில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து, கரும்பின் மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட சத்து ஊக்கியான, கரும்பு பூஸ்டர் பயன்படுத்தும் முறை குறித்தும், தெளிக்கும் முறை குறித்தும், மாணவியர், விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில், கரும்பு பூஸ்டரை பயன்படுத்துவதால், இடைக்கணுக்களின் நீளம் கூடும். கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும். சர்க்கரை கட்டுமானம் கூடும். வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கும்.எனவே, விவசாயிகள் கரும்பு பூஸ்டரை பயன்படுத்த வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.