வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
மேட்டுப்பாளையம்; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள், காரமடை அடுத்த காளம்பாளையத்தில், தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில், இயற்கை முறையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் கவர்ச்சிப் பொறி, வேளாண் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக், மற்றும் மூடாக்கு உள்ளிட்ட பல்வேறு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதுகுறித்து, வேளாண் மாணவிகள் கூறுகையில், 100 கிராம் ஆமணக்கு விதைப் பொடி மற்றும் பப்பாளி, 50 கிராம் நாட்டுச்சக்கரை, 200 மில்லி லிட்டர் அரிசி நீர் கழுவிய நீர் மற்றும் தண்ணீர், இவை அனைத்தையும் கலந்து தென்னை மரத்திற்கு அருகில் மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். இது இயற்கை முறையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் கவர்ச்சிப் பொறியாகும். தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை பின்பற்றுவதன் வாயிலாக பூச்சிகளை எளிதாக கட்டுப்படுத்துவதோடு அதிக லாபம் பெறலாம் என்றனர்.