உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவையில் ஒரு ரோடு கூட உருப்படியாக இல்லை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

 கோவையில் ஒரு ரோடு கூட உருப்படியாக இல்லை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கோவை: ''கோவையில் ஒரு ரோடு கூட உருப்படியாக இல்லை. வாகனம் ஓட்டுவோர் முகுதுவலியால் அவதிப்படுகின்றனர்,'' என, கோவை மாநகராட்சி அ.தி.மு.க., மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் குற்றஞ்சாட்டினார். கோவை மாநகராட்சியில், விக்டோரியா ஹால் முன், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர், பதாகைகளுடன் நேற்று போராட்டம் நடத்தினர். அதன்பின், பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது: அவசர கூட்டம் என்றால் முக்கியமான ஒரு தீர்மானத்தை முன்வைத்து நடத்த வேண்டும். 30ல் நடைபெற வேண்டிய கூட்டத்தை, 31க்கு மாற்றி, அவசரமாக நடத்துகின்றனர். மொத்தம் 105 தீர்மானங்கள். தி.மு.க., கவுன்சிலர்கள் கூட முழுமையாக படித்திருக்க மாட்டார்கள். வெள்ளலுாரில் துவங்கி செட்டிபாளையம், ஆத்துப்பாலம், குனியமுத்துார், கோவைப்புதுார் வரை குப்பை கிடங்கு துர்நாற்றம் வீசுகிறது. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் நலனில் அக்கறை இல்லாத மேயராக இருக்கிறார். தொழில் நகரான கோவையை தி.மு.க., அரசு குப்பைமேடாக மாற்றி வைத்திருக்கிறது. இரு மாதங்களாக செம்மொழி பூங்காவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவழித்து குளங்கள் மேம்படுத்தப்பட்டன. அதை பற்றி கவலைப்படாமல், முடக்கி வைத்திருக்கின்றனர். கோவைக்கு வெளிநாட்டினர் தொழில் துவங்க வர மாட்டார்கள். ஏனெனில், அந்தளவுக்கு ரோடு படுமோசமாக இருக்கிறது. கிழிந்த சட்டைக்கு ஒட்டுப்போட்டிருப்பதுபோல், ஆங்காங்கே 'பேட்ச் ஒர்க்' செய்திருக்கின்றனர். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவோர் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம் தி.மு.க., நிர்வாகத்தின் சீர்கேடு. ஒரு ரோடு கூட உருப்படியாக இல்லை; அத்தனை ரோடுகளும் குண்டும் குழியுமாக இருக்கிறது. பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. ஒரு மழைக்கு கூட தாங்குவதில்லை. இதற்கு முன் ரோடு போட்டால், நான்கு அல்லது ஐந்தாண்டுகள் தாங்கும். இப்போது, கனரக வாகனங்கள் சென்றால் சேதமாகி விடுகிறது. கமிஷன் வாங்கிக் கொண்டு, தரமின்றி சாலை போடப்படுகிறது. நான்கரை ஆண்டுகளில் ரோடு போட செலவிட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். எல்.இ.டி., விளக்குகள் போதிய வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சட்டம் - ஒழுங்கு பிரச்னை நடக்கிறது. நடைபயிற்சி மேற்கொள்வோரை நாய்கள் துரத்துகின்றன. கோவை மக்கள் மிகப்பெரிய அளவில் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். சொத்து வரி பெயர் மாற்றுவதற்கு 500 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது; இலவசமாக செய்து தரலாம். தொழில் நகரான கோவை இன்று கொலை நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது. வாழத்தகுதியில்லாத நகரமாக மாற்றிக் கொண்டிருப்பதை அ.தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

'தோள்பட்டை வலி ஏற்படும்'

பைக் மெக்கானிக், கராஜ் உரிமையாளர் ஆறுச்சாமி கூறியதாவது: குண்டு, குழிகளில் பைக் ஏறி இறங்குவதால் முதலில் தோள்பட்டை வழி ஏற்படும். பைக்கின் 'போர்க்' லூசாவதால் தேய்மானம் ஏற்பட்டு, முதுகு தண்டு, மணிக்கட்டு, கைகளில் வலி ஏற்படும். ஹேண்டில் பார் வளைவதால் கை வலி வரும். கை வலிக்கிறதா என கேட்போம். ஆமாம் என்று சொன்னால், ஹேண்டில்பார் வளைந்துள்ளது என்பதை உறுதி செய்யலாம். கவனிக்காமல் தொடர்ந்து ஓட்டினால் வலி கையில் இருந்து முதுகு, தோள்பட்டை, கழுத்து என்று பரவி பெரிய பிரச்னையில் முடியும். பின் சக்கர பேரிங் மற்றும் 'செயின் ஸ்பிராக்கட்' ஆகியவையும் தேய்ந்து வண்டி துாக்கி தூக்கி போடும். டயர் தேய்வதும் அதிகரிக்கும். 40 ஆயிரம் கி.மீ. ஓட வேண்டிய டயரை 20 ஆயிரம் கி.மீ. ஆனதுமே மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

'கழுத்து, முதுகு தேய்மானம் ஆகும்'

அரசு மருத்துவமனை ஆர்த்தோ பிரிவு இயக்குனர் டாக்டர் வெற்றிவேல்செழியன் கூறுகையில், ''மேடு, பள்ளமாக உள்ள சாலைகளில் தொடர்ந்து பயணிக்கும் போது, இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, பஸ், காராக இருந்தாலும் முதுகு வலி, தண்டுவட பிரச்னை அதிகளவில் வரும். மோசமான சாலைகளில் திடீர் என்று பிரேக் போட நேர்வதால், விபத்து நடந்து பலர் எலும்பு முறிவுகளுடன் அட்மிட் ஆகின்றனர். இதுபோன்ற சாலைகளில் தொடர்ந்து பல ஆண்டுகள் வாகனம் ஓட்டுபவர்களின் கழுத்து, முதுகு பகுதிகளில் தேய்மானம் அதிகரித்து பிற்காலத்தில், கடுமையான வலியுடன் போராட வேண்டி இருக்கும், '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ