மாநகராட்சி அலுவலகம் அ.தி.மு.க.,வினர் முற்றுகை
பெ.நா.பாளையம்; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 16, 17, 34, 35வது வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், குடோன்கள் 'ட்ரோன்' வாயிலாக அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கேற்ப வரிகளை மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ளது. ஆனால், இது குறித்து வீட்டின் உரிமையாளருக்கு அறிவிப்பு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. மாநகராட்சி அலுவலகத்துக்கு வரி செலுத்த வரும்போதுதான், வரி உயர்வு குறித்து உரிமையாளர்களுக்கு தெரிய வருகிறது. இது குறித்து வரி வசூலரிடம் கேள்வி எழுப்பினால், மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிடுங்கள் என்று கூறுகின்றனர். அதிகாரிகள் யாரும் வரி வசூல் மையங்களில் இருப்பதில்லை. இதனால் வீட்டின் உரிமையாளர்கள் வரி செலுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது.இந்நிலையில், கவுண்டம்பாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சின்னசாமி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.,வினர், கவுண்டம்பாளையம் மாநகராட்சி வசூல் வரி வசூல் மையத்துக்கு சென்று, வரி உயர்த்தப்பட்ட பொதுமக்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கி, அவர்களின் சந்தேகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர். அ.தி.மு.க., வினர் கவுண்டம்பாளையம் மாநகராட்சி வரி வசூல் மையத்தை முற்றுகையிட்டனர்.