உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அ.தி.மு.க., கிளை அலுவலகத்தை அகற்றாமல் திரும்பிய அலுவலர்கள்

அ.தி.மு.க., கிளை அலுவலகத்தை அகற்றாமல் திரும்பிய அலுவலர்கள்

கோவை; கோவை சலீவன் வீதி - இடையர் வீதி சந்திப்பு பகுதியில், நடைபாதையை ஆக்கிரமித்து அமைத்துள்ள அ.தி.மு.க., கிளை அலுவலகத்தை, நகரமைப்பு பிரிவினர் அகற்றாமல் திரும்பிச் சென்றனர்.கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 73வது வார்டில் சலீவன் வீதி - இடையர் வீதி சந்திக்கும் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதன் அருகே உள்ள சிறிய இடத்தை ஆக்கிரமித்து, நடைபாதையில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு ஷெட் அமைத்து, 'தொண்டாமுத்துார் பகுதி கழகம்' என்கிற பெயர் பலகையுடன், அ.தி.மு.க., கிளை அலுவலகம் நடத்தப்படுகிறது. அதன் முன்பகுதியில், அ.தி.மு.க., கொடிக்கம்பம் நடப்பட்டிருக்கிறது. இவற்றை தாமாக அகற்றிக் கொள்ள, மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் இருந்து ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அகற்றாததால், உதவி நகரமைப்பு அலுவலர் மகேந்திரன் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார், பொக்லைன் இயந்திரங்களுடன், நேற்று சென்றனர்.கிளை அலுவலகத்தை அகற்ற, அ.தி.மு.க.,வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடிய சூழல் ஏற்பட்டது. சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், தேவையற்ற பிரச்னையை உருவாக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதால், அக்கிளை அலுவலகத்தை அகற்றாமல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், திரும்பி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை