கோடை விடுமுறை முடிந்து அனைத்து கோர்ட்கள் திறப்பு
கோவை, : ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, கோவையில் அனைத்து கோர்ட்கள் நேற்று செயல்பட துவங்கியது. கோடை காலத்தை முன்னிட்டு, மே 1 முதல் 31 வரை, கோர்ட்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ் கோர்ட்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் முன்சிப் கோர்ட்கள் செயல்படவில்லை. அனைத்து மாஜிஸ்திரேட் மற்றும் சிறப்பு கோர்ட்கள் செயல்பட்டன.கோவை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், கோடை விடுமுறையில் ஜாமின் மற்றும் முன்ஜாமின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து, கோவையில் நேற்று அனைத்து நீதிமன்றங்களும் வழக்கம் போல செயல்பட்டன. அனைத்து கோர்ட்களிலும், சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. இதனால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.