அரசு மருத்துவமனை முன் வாகனம் நிறுத்துவதை தவிர்க்க மாற்று இடம்
கோவை; கோவை அரசு மருத்துவமனை முன், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க, மாற்று இடம் ஒதுக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.கோவை அரசு மருத்துவமனைக்கு வருவோரின் இரு சக்கர வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.இதனால் லங்கா கார்னர் முதல் ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு சந்திப்பு சிக்னல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுதொடர்பாக, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அரசு மருத்துவமனை முன் தற்போது செயல்படும் பஸ் முனையத்துக்கு பின்புறம் வாலாங்குளத்தின் கரைப்பகுதி இருக்கிறது. இங்கு வசதி இருப்பதால் இரு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்தலாம் என மாநகராட்சி தரப்பில் ஆலோசனை கூறப்பட்டது. அவ்விடத்தை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். 70 சென்ட் பரப்புக்கு இடம் இருப்பதால், உடனடியாக, அப்பகுதியை சுத்தம் செய்து, வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்ய, பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.இதேபோல், வடகோவை சிந்தாமணி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாநகராட்சி சார்பில் 'ரவுண்டானா' அமைத்து, சந்திப்பு பகுதியை மேம்படுத்த, கமிஷனர் அறிவுறுத்தினார். பின், விளாங்குறிச்சி ரோட்டில் டைடல் பார்க் அலுவலகம் முன் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தவிர்க்க, அப்பகுதியிலும் 'ரவுண்டானா' அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.