உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீக்காய முதலுதவி சிகிச்சை வழங்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் அலர்ட்

தீக்காய முதலுதவி சிகிச்சை வழங்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் அலர்ட்

- நமது நிருபர் - தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில், அவசர அழைப்புகளை விரைந்து எதிர்கொள்ள, '108' ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் என, '108' ஆம்புலன்ஸ் கோவை மண்டல மேலாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தீபாவளி சமயத்தில் அனைத்து அவசர உதவிகளுக்கும், அதாவது, போலீஸ், மருத்துவம், தீயணைப்பு சேவைக்கு '108' என்ற எண்ணை அழைக்கலாம். வழக்கமாக, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்திவைக்கவுள்ளோம். அவசர அழைப்பு பெறப்பட்ட இடத்தை அடைய, ஆறு முதல் எட்டு நிமிடங்கள் தற்போது ஆகிறது. தீபாவளி சமயத்தில், இதனை 5 முதல் ஏழு நிமிடமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம். தீக்காயம் ஏற்பட்டவரை காப்பாற்ற முதலுதவி தீக்காய மருந்துகள், '108' பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பயிற்சியும் அளித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். '108' ஆம்புலன்ஸ் கோவை மாவட்ட திட்ட அலுவலர் கணேஷ் கூறுகையில், ''62 ஆம்புலன்ஸ், 4 பைக் ஆம்புலன்ஸ் தீபாவளி முடியும் வரை, 'ஹாட் ஸ்பாட்' இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில், அலர்ட்டாக இருக்கும். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை, அரசு பொது மருத்துவமனை டாக்டர்களுக்கு முன்கூட்டி தெரிவிக்கும் வசதி இருப்பதால், சிகிச்சை உடனுக்குடன் அளிக்க இயலும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை