மக்கள் பயன்பாட்டிற்கு வராத அம்மா திருமண மண்டபம்; குப்பை குவிக்கும் இடமாக மாறியுள்ளது
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அம்மா திருமண மண்டபம், பயன்பாடின்றி புதர் மண்டி கிடப்பதுடன், சமூக விரோத செயல்களுக்கு கூடாரமாக மாறியள்ளது. முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டியில் அம்மா திருமண மண்டபம், 2019ம் ஆண்டு, 1.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அப்போதைய எம்.பி., மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டது.பயன்பாட்டுக்கு வராமல் இருந்த மண்டபம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தற்காலிக அலுவலக கட்டடமாக செயல்பட்டது. மண்டபம் பயன்பாட்டில் இருந்ததால் பராமரிப்புடன் காணப்பட்டது.சில மாதங்களுக்கு முன் தெற்கு ஒன்றிய அலுவலகம் மாற்றப்பட்டது.அதன்பின், கட்டடம் போதிய பராமரிப்பின்றி புதர்கள் மண்டிக்காணப்படுகிறது. விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.அம்மா திருமண மண்டபம் முன் குப்பை குவிக்கப்பட்டு எரிப்பதால், அந்த இடமே சுகாதாரமின்றி காட்சியளிக்கிறது. நகரின் எல்லைப்பகுதியில் உள்ள மண்டபத்தின் முன்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையால், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஆச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 10 ஏக்கர் நிலம் நகராட்சிக்கு சொந்தமாக உள்ளது. இங்கு, அம்மா திருமண மண்டபம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது.நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபத்துக்கு, வடக்கு ஒன்றியம் வாயிலாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அதன்பின், பராமரிப்பது, நகராட்சியா அல்லது ஒன்றியமா என்ற குழப்பம் நீடிக்கிறது.ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டப பணிகள் முடிந்தும், இதுவரை ஒரு நிகழ்ச்சி கூட நடத்தப்படவில்லை.தெற்கு ஒன்றிய அலுவலமாக செயல்பட்ட மண்டபம் தற்போது பரிதாபமாக மாறியுள்ளது. இங்கு சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன.எந்த நோக்கத்துக்காக மண்டபம் கட்டப்பட்டதோ அதன் நோக்கமே வீணாகிறது. அம்மா திருமண மண்டபத்தை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, கூறினர். சப்-கலெக்டரிடம் மனு
ஆச்சிப்பட்டி கிளை மா.கம்யூ., கட்சி சார்பில், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுவில், 'ஆச்சிப்பட்டி தில்லை நகரில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபம், போதிய பராமரிப்பின்றி கிடக்கிறது. மக்கள் வரிப்பணம் வீணாகிறது. இது குறித்து ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு திருமண மண்டபத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.