நிதியிழப்பு தொகை: அரசுக்கு செலுத்த அறிவுரை
அன்னுார் : நிதி இழப்பு ஏற்பட்ட தொகையை, அரசுக்கு செலுத்த, தணிக்கை அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 2023 ஏப். 1 முதல், 2024 மார்ச் 31 வரை, நடைபெற்ற பணிகள், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், 2016 முதல் 2022ம் ஆண்டு வரை கட்டப்பட்ட வீடுகள் குறித்த சமூக தணிக்கை, கடந்த 4ம் தேதி கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில் துவங்கியது.அன்னுார் ஒன்றியத்தில், ஆம்போதி ஊராட்சியில், கடந்த வாரம் பணிகள் நடைபெற்ற இடங்களில், வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில் தணிக்கையாளர்கள் கள ஆய்வு செய்து, அளவீடுகள் எடுத்தனர்.தனியார் தோட்டங்களில் வரப்பு அமைக்கப்பட்டுள்ளதா, மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதா, சிறு பாலம் அமைத்தல், உறிஞ்சுகுழி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு உள்ளனவா என ஆய்வு செய்தனர்.100 நாள் திட்ட தொழிலாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டது. சமூகத் தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு, ஆம்போதி ஊராட்சி அலுவலகம் முன் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் எவ்வளவு பணிகள் செய்யப்பட்டன. எத்தனை பேருக்கு வேலை அளிக்கப்பட்டது. என்ன மதிப்பீடு, ஆட்சேபனைகள் என்னென்ன, என்பது குறித்த தணிக்கை அறிக்கையை, வட்டார வள அலுவலர் கனகராஜ் வாசித்தார்.நிதி இழப்பு ஏற்பட்ட தொகையை அரசுக்கு செலுத்த, தணிக்கை அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டது. மூத்த உறுப்பினர் ராஜன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் சவுந்தரி அருண், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாதேவி மற்றும் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.