நகருக்குள் உலா வந்த யானை: நள்ளிரவில் மக்கள் திக்...திக்...
வால்பாறை: வால்பாறை நகருக்குள் நள்ளிரவில் விசிட் செய்த ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டினர். வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை நகரை ஒட்டியுள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட ஒற்றை யானை நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, வால்பாறை நகருக்குள் நுழைந்தது. பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு வழியாக பொதுப்பணித்துறை குடியிருப்புக்கு செல்லும் ரோட்டில் யானைகள் நீண்ட நேரமாக முகாமிட்டது. அங்கு வந்த வனத்துறையினர், குடியிருப்பு பகுதிக்குள் யானை நுழையாதவாறு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின் யானையை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறை நகரை ஒட்டியுள்ள புதுத்தோட்டம் பகுதியில் பகல் நேரத்தில் முகாமிட்ட ஒற்றை யானை, இரவு நேரத்தில் உணவு தேடி, வால்பாறை நகருக்குள் நுழைந்தது. தகவல் அறிந்த மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் விரைந்து சென்று, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தால் பொதுமக்களாகவே விரட்டாமல், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.