வாடகை கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி: நகராட்சி கூட்டம் நடக்காததால் சிக்கல்
வால்பாறை: வால்பாறை நகரில், அங்கன்வாடி மையம் கட்ட நகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறையில், 43 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த கல்வியாண்டில் இது வரை, 855 குழந்தைகள் அங்கன்வாடியில் சேர்ந்து ஆரம்ப கல்வி கற்கின்றனர். இதில், வெளிமாநிலத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் தமிழ் கற்கின்றனர். இந்நிலையில், வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகரில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டது. தற்போது, இந்த கட்டடம் இடியும் நிலையில் உள்ளதால் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாக கூறி, அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டு வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. பெற்றோர்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டடத்தை இடித்து, புதிதாக அங்கன்வாடி மையம் கட்டித்தருவதாக நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஓராண்டாக வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு போதிய வசதி இல்லாததால், மையத்திற்கு குழந்தைகள் அனுப்பவே பயமாக உள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் பழைய கட்டடத்தை இடித்து, புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'எம்.ஜி.ஆர்.,நகரில் பாழடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையம் கட்டடத்தை இடித்து, புதியதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக நகராட்சி மன்றக்கூட்டம் நடைபெறாததால், இதற்கான டெண்டர் விட முடியவில்லை. விரைவில் டெண்டர் விடப்பட்டு, அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.