உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்கன்வாடி பணியாளர்களுக்கு  கூடுதல் பொறுப்பு படி உயர்வு 

அங்கன்வாடி பணியாளர்களுக்கு  கூடுதல் பொறுப்பு படி உயர்வு 

பொள்ளாச்சி; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தில் பணிபுரியும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கூடுதல் பொறுப்பு படி ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. பணியாளர்கள், காலியாக உள்ள மையத்தை கூடுதலாக கவனிக்க, கூடுதல் பொறுப்பு படியாக நாள் ஒன்றுக்கு, 20 ரூபாய் வீதம் மாதத்துக்கு, 600 ரூபாய் வழங்கப்பட்டது.கூடுதல் பொறுப்பு படி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொறுப்பு படியை உயர்த்தி வழங்கி, அரசாணை வெளியிட்டுள்ளது.அரசாணையில் கூறியிருப்பதாவது:அங்கன்வாடி குழந்தைகள் மையத்தின் அருகில் உள்ள மையத்தில், பணியாளர் பணியிடம் காலியாக இருப்பின் அம்மையம், அந்த பணியாளருக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்படுகிறது. ஓர் அங்கன்வாடி பணியாளர், கூடுதல் மையங்களை கவனிக்க வேண்டியதுள்ளது.மொத்தம், 5,995 காலிப்பணியிடங்களுக்கான பொறுப்பு படியினை நாளொன்றுக்கு, 50 ரூபாய் வீதம் ஒரு மாதத்துக்கு, 1,500 ரூபாயாக வழங்கப்படும்.அதில், ஓர் அங்கன்வாடி பணியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களை கூடுதலாக கவனித்தாலும், ஒரு மையத்துக்கான கூடுதல் பொறுப்பு படியினை மட்டுமே வழங்க வேண்டும்.ஒரு வாரத்துக்கு மேல் ஒரு குழந்தைகள் மையத்தில், கூடுதல் பொறுப்பில் பணிபுரிந்தால் மட்டுமே, கூடுதல் பொறுப்பு படியினை வழங்க வேண்டும்.ஒரு வாரத்துக்குள் மேல் பணிபுரிந்து, ஒரு மாதத்துக்குள் பணிபுரிந்து இருந்தால், நாளொன்றுக்கு, 50 ரூபாய் வீதம் கணக்கிட்டு பொறுப்பு படியினை வழங்க வேண்டும்.கூடுதல் பொறுப்பேற்ற நாளில் இருந்து, கூடுதல் பொறுப்பு முடியும் நாள் வரையுள்ள நாட்களுக்கு, தற்செயல்விடுப்பு நாட்களை தவிர, ஏனைய கூடுதல் பொறுப்பேற்ற நாட்களுக்கு (விடுமுறை நாட்கள் உட்பட) பொறுப்பு படியினை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி