கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
பொள்ளாச்சி: ஆனைமலை அருகே, கோட்டூர் பழனியூரில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடைத்துறை சார்பில், கிராமங்களில், கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கறவை மாடுகள் பராமரிப்பு வழிகாட்டுதல் வேண்டி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை அருகே கோட்டூர் பழனியூரில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் சக்ளாபாபு, தலைமை வகித்தார். டாக்டர்கள் கவுதம், சுந்தரமகாலிங்கம் உள்ளிட்டோர் கால்நடைகளில் நோய் பாதிப்பை கண்டறிந்தனர். மேலும், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம், சினை சரிபார்ப்பு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு ஆலோசனையும், தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டது. சிறந்த கிடாரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டன.