நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 4 லட்சம் பணம் பறிமுதல்
கோவை: கோவை, சேரன் மாநகரில் உள்ள நகர ஊரமைப்பு இணை இயக்குனர் அலுவலகத்தில், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 4 லட்சம் பணம் சிக்கியது.காந்திமாநகரில் உள்ள நகர ஊரமைப்பு இணை இயக்குனர் அலுவலகத்தில் கட்டட அனுமதி, மனைகளை வரன்முறைப்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி பெற லஞ்சம் கேட்பதாக, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் வந்தது.லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில் போலீசார், நேற்று மாலை இணை இயகக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்து 100 பணம் சிக்கியது.பறிமுதல் செய்த போலீசார், யார் யார் லஞ்சம் பெற்றனர், எவ்வளவு லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என விசாரிக்கின்றனர்.* நேற்று காலை க.க.சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக, சோதனை சாவடிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சோதனை சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் புர்ஹானுதீன், உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் அலுவலக உதவியாளர் தங்கராஜ் ஆகியோர் இருந்தனர். கணக்கில் வராத ரூ. 96 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.