உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

பெ.நா.பாளையம்;வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள பட்டியல், வரைவு பட்டியலாக வெளியிடப்படும். தற்போதைய வாக்காளர் பட்டியலை, திருத்துவதற்கான வரைவு பட்டியல் கடந்த அக்., 27ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடவும், அதில் திருத்தங்கள் செய்யவும், புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்கவும், கடந்த டிச., 9ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவ., மாதம், 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தவிர, 'ஆன்லைன்' வாயிலாக, விண்ணப்பங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட அக்., 27ம் தேதி தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 6.11 கோடியாக இருந்தது. பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும், 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.இதுகுறித்து, கோவை தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், முதல் கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி, புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள், முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய வாக்காளர் அடையாள அட்டை விரைவில் பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்படும். புதியதாக வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் சேர்க்கவும், அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ