அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த ஏற்பாடு
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆண்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில், ஜனவரி முதல் மார்ச் வரை, அரசு பள்ளிகளில், ஆண்டுவிழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளிகளின் செயல்பாடு, மாணவர்களின் சிறப்பம்சங்களை பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுவிழா நடத்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன் போட்டோ மற்றும் வீடியோ பதிவை, 'எமிஸ்' தளத்தில் பதிவிட வேண்டும். நடப்பாண்டு, ஆண்டு விழா நடத்துவதற்கு, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 2,500 ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், தொகை கிடைப்பதற்கு முன்னதாகவே, பல பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, படிப்பில் கவனம் செலுத்தும் மாணவர்களுக்கு இதுபோன்று விழா நடத்துவதன் வாயிலாக ஆசுவாசம் அடைவர்.அதேபோல, பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி என்பதால், அனைத்து வகுப்பு மாணவர்களின் பங்களிப்பும் இருக்கும். அரசால் ஒதுக்கப்படும் தொகை போதுமானதாக இருக்காது என்பதால், ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.