பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன காட்சி வெகு விமர்சையாக நடந்தது.அதிகாலை 4:35 மணிக்கு, மஹா அபிஷேகம் துவங்கியது. இதில் நடராஜப்பெருமானுக்கும், சிவகாமி அம்பாளுக்கும், அரிசி மாவு பொடி, வில்வ பொடி, நெல்லி பொடி, திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பழச்சாறு, பால், தயிர், நெய், தேன், சந்தனம், மஞ்சள், விபூதி, கலசபிஷேகம் என, 21 வகையான திரவியங்களை கொண்டு, அபிஷேகம் நடந்தது.காலை, 8:30 மணிக்கு, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் ஆருத்ரா தரிசன காட்சி அளித்தனர். அதனைத்தொடர்ந்து, நடராஜப்பெருமான், சிவகாமி அம்பாள், கோவிலின் உள்பிரகாரத்தில், திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, மீண்டும் கனகசபை மண்டபத்தில் எழுந்தருளினர். ஆருத்ரா தரிசனத்தையொட்டி, அதிகாலையிலேயே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.