ரேஷன் கடையில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு
கருமத்தம்பட்டி; அரசூர் ரேஷன் கடையில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எம்.எல்.ஏ., நந்தகுமார் தலைமையில் உறுப்பினர்கள், நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு அரசூரில் உள்ள ரேஷன் கடையில் குழுவினர் ஆய்வு செய்தனர். அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பாக உள்ளனவா, பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து, கருமத்தம்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில் செயல்படும் ரேஷன் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யும் ஆய்வகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொருட்கள் எவ்வாறு தரப்பரிசோதனை செய்யப்படுகிறது என, கேட்டறிந்தனர். குழு உறுப்பினர்கள், கலெக்டர் பவன் குமார், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கோவை மண்டல கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் , பொது வினியோக திட்ட துணை பதிவாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.