ஈஸ்வர் கல்லூரி சார்பில் கிராமங்களுக்கு உதவி
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, ஈஸ்வர் பொறியியல் கல்லூரி சார்பில் அரசு திட்டத்தில் கிராமங்களுக்கு உதவி செய்யப்பட்டது.கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கொண்டம்பட்டி, குருநல்லிபாளையம், கோதவாடி, வடசித்தூர், மன்றாம்பாளையம் என ஐந்து வருவாய் கிராமங்களை தத்தெடுத்து, உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் வாயிலாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.இதைதொடர்ந்து, நேற்று கோதவாடி ஊராட்சியில் கல்லூரி சார்பில், ஒரு லட்சம் மதிப்பிலான இரு சோலார் பால் கறக்கும் இயந்திரம், இரு குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பயன்படுத்தும் முறை குறித்து அப்பகுதி மக்களுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.மேலும், கனரா வங்கி சார்பில் விவசாயிகளுக்கு கடன் பெற்று தரவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதியாக கல்லூரி சார்பில் ஊராட்சி அலுவலகத்தின் அருகே மரக்கன்று நடவு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, கல்லூரி தலைவர் மோகன்ராம், பேராசிரியர்கள் கருப்புசாமி, அன்பரசு மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.