பெட்டிக்கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய உதவி ஆசிரியருக்கு சிறை
கோவை; பத்திரிகையாளர் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டிய நபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை, ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன், 25. மகளிர் பாலிடெக்னிக் சந்திப்பில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, கடைக்கு மதுபோதையில் வந்த ஒரு நபர், பிரவீனிடம் தான் பத்திரிகை ஒன்றில் பணிபுரிவதாக கூறி, ரூ.5,000 கேட்டு மிரட்டினார்.பிரவீன் பணம் தர கொடுக்க மறுத்ததை தொடர்ந்து அந்நபர், 'பணம் தரவில்லை எனில், பெட்டிக்கடையில் கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக, எனது பத்திரிகையில் செய்தி வெளியிட்டு விடுவேன்' என மிரட்டியுள்ளார்.இதுகுறித்து பிரவீன், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் அந்நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர், ரத்தினபுரி வ.உ.சி., நகரை சேர்ந்த பிரபு, 48 எனத் தெரிந்தது.அவர், தான் ருத்ரம் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகையில், உதவி ஆசிரியராக பணிபுரிவதாக தெரிவித்துள்ளார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.