அறிவியல் திறன் வளர்க்க அடல் டிங்கரிங் லேப் பயிற்சி
கோவை: அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காக, ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி, ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மத்திய அரசின் அடல் இன்னோவேஷன் மிஷன் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் மாணவர்களிடையே புதுமை, படைப்பாற்றல் மற்றும் அறிவியல் திறன்களை வளர்க்கும் நோக்கில், 'அடல் புத்தாக்க ஆய்வகங்கள்' (அடல் டிங்கரிங் லேப்) தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த, பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 4.0 கீழ் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. கோவையில் உள்ளஅரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன. மாவட்டத்தில், எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,குனியமுத்தூர் அரசுமேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட, 63 பள்ளிகளில் இந்த ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது நடைபெற்ற பயிற்சியில், ஒரு பள்ளிக்கு தலா 5 ஆசிரியர்கள் வீதம்பங்கேற்றனர்.