உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஆர்வலர்கள் தீர்த்தக்குட யாத்திரை

அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஆர்வலர்கள் தீர்த்தக்குட யாத்திரை

மேட்டுப்பாளையம்; அத்திக்கடவு-அவிநாசி திட்ட ஆர்வலர்கள் பவானி ஆற்றுத் தண்ணீரை எடுத்து தீர்த்தக்குட யாத்திரை நடத்தினார்கள்.அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை, நிறைவேற்றக்கோரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகள், பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து, இத்திட்டம் துவக்கப்பட்டது. அணையில் தேங்கி நிற்கும் தண்ணீரை மின் மோட்டார்கள் வாயிலாக, பம்பிங் செய்து குளம், குட்டைகளுக்கு நிரப்பப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், 145 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.திட்டம் விரைவில் துவங்க வேண்டும் என, அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஆர்வலர்கள் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் புத்தாண்டு அன்று, தங்கள் ஊர்களில் இருந்து, வாகனங்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருவர். கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து, அதை கோவிலில் வைத்து பூஜை செய்து, தங்கள் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள கோவில்களில் உள்ள சுவாமிகள் மீது அபிஷேகம் செய்து, வழிபட்டு வந்தனர். கடந்தாண்டு இத்திட்டம் நிறைவடைந்து துவங்கியது. தற்போது குளம் குட்டைகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகின்றன.இருந்த போதும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டியும், தற்போது திட்டத்தில் உள்ள குட்டைகளுக்கு தண்ணீர் தொடர்ந்து வழங்க வேண்டியும், அத்திக்கடவு ஆர்வலர்கள் இந்த ஆண்டும் தீர்த்தக்குட யாத்திரையை மேற்கொண்டனர். ஏராளமான அத்திக்கடவு ஆர்வலர்கள் பவானி ஆற்றில் தீர்த்தத்தை எடுத்து வனபத்ரகாளியம்மன் கோவிலில் பூஜை செய்து, தங்கள் கிராமங்களுக்கு எடுத்துச் சென்றனர்.இதுகுறித்து ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலையபாளையம் ஏ.நல்லகட்டிபாளையத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆர்வலர்கள் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துச் சென்றனர். அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தைச் சுற்றி மூன்று குட்டைகள் உள்ளன. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் வாயிலாக, மூன்றிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனால் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிணறுகளுக்கு, நீரூற்று கிடைத்து வருகிறது.பவானி ஆற்றில் எடுக்கப்படும் தீர்த்தத்தை எங்கள் கிராமத்தில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்யப்படும். மேலும் இத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு விரைவில் தண்ணீர் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஆர்வலர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை