உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோடையில் அதிகரிக்கும் தண்ணீர் பிரச்னை தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை

 கோடையில் அதிகரிக்கும் தண்ணீர் பிரச்னை தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை

கிணத்துக்கடவு: கோடை காலம் நெருங்குவதால், மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. இதில், ஒரு சில ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடிநீர் வினியோகம் இல்லை. இதற்கு மாற்றாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிணறு மற்றும் போர்வெல் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால், அதற்கேற்ப வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்களின் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. வெயில் அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் போது, ஊராட்சிகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் அளவும் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் அனைவரும் தண்ணீரை வீணடிக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, போர்வெல் மோட்டார்கள் பழுதடைந்தால் அதை சரி செய்வதற்கான முன்னேற்பாடுகள், கூடுதல் போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் இடங்களுக்கு, முக்கியத்துவம் அளித்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதில், சோழனூர் ஊராட்சியில், 60 ஆயிரம் லிட்டர் அளவில் தொட்டி; சூலக்கல் ஊராட்சியில், 30 ஆயிரம் லிட்டர் அளவில், இரண்டு மேல்நிலை தொட்டிகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பனப்பட்டி கிராமத்தில், 50 சதவீதம் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து ஊராட்சிகளிலும் முழுவதுமாக தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை