உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டுக்கு சென்று விழிப்புணர்வு; l90 பேர் பள்ளிக்கு திரும்பினர் கூட்டு முயற்சிக்கு வெற்றி!

வீட்டுக்கு சென்று விழிப்புணர்வு; l90 பேர் பள்ளிக்கு திரும்பினர் கூட்டு முயற்சிக்கு வெற்றி!

மேட்டுப்பாளையம்; காரமடை கல்வி வட்டாரத்தில் 525 பள்ளி செல்லா மாணவ, மாணவிகள் கண்டறியப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியாக தொழிலாளர் துறை, கல்வி துறை, காவல் துறை, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இதுவரை 380 பேர் வீடுகளுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனால் 90 பேர் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற மாணவர்கள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை, தொழிலாளர் துறை, திறன் மேம்பாட்டுத்துறை, காவல் துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த குழுவிற்கு நீண்ட நாட்களாக, பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த விவரங்களை, அந்தந்த பகுதி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வழங்குகின்றனர். இக்குழுவினர் பள்ளிக்கு வராத மாணவர்களை தொடர்பு கொண்டும், நேரில் சென்றும், அவர்கள் தொடர்புடைய உறவினர்கள், பெற்றோர்களிடம் பேசி, அம்மாணவரை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.அதன் படி, காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பகுதிகளில் இக்குழுவினர் 525 பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்தனர். இதில் தற்போது வரை 380 பேரின் வீட்டிற்கு நேரில் சென்று, ஏன் பள்ளிக்கு வரவில்லை, குடும்ப சூழ்நிலை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை மேற்கொண்டனர். பின், மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வியின் முக்கியத்துவம், பள்ளி செல்லவில்லை என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளை, எடுத்துக்கூறி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அறிவுரை கூறினர். இதையடுத்து 90 பேர் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.இதுகுறித்து காரமடை வட்டார வள மைய ஆசிரியர் சுரேஷ் கூறுகையில், ''பள்ளி செல்லா மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பள்ளிக்கு வராத காரணத்தை கண்டறிந்தோம். இதில் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வருவது இல்லை என்ற விவரம் பெற்றோர்களுக்கே தெரியவில்லை. பள்ளிக்கு செல்வது போல் ஏமாற்றியுள்ளனர். மேலும், சிலர் குடும்ப சூழ்நிலை, தேர்வு பயம் உள்ளிட்டவற்றால் பள்ளிக்கு வரவில்லை என கண்டறிந்தோம். அவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கியுள்ளோம். தற்போது இடைநின்ற மாணவர்கள் பெரும்பாலானோர் மீண்டும் வர துவங்கியுள்ளனர். அதே போல் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் இடைநின்ற மாணவர்களுக்கு தனியாக வகுப்பு நடத்தி, தேர்வு எழுத வைக்கிறோம்.அவர்களது பயத்தை போக்கிறோம். 10ம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு நின்றவர்களுக்கும் உயர்கல்வி பயில வழிகாட்டப்படுகிறது. முகாம்கள் நடத்தி பலரும் ஐ.டி.ஐ., டிப்ளமோ போன்ற படிப்புகளில் சேர்ந்துள்ளனர்,'' என்றார்.மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறுகையில், ''பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன். படித்தால் தான், நல்ல வேலை கிடைத்து பொருளாதார ரீதியாக முன்னேற முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படத்தி வருகிறேன்'' என்றார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி